நடந்ததையே நினைத்திருந்தால் எதிர்காலம் வெகுமதி தராது
கனடியத் தமிழர் பேரவை [Canadian Tamil Congress — CTC] வருடாந்தம் நடாத்தி வரும் 'பொங்கல் விழா' கடந்த 24-01-2026 சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. ஏராளமான மக்களும், கனடிய அரசியல் தலைவர்கள் பலரும் அதில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த ஆண்டிற்கான சிறப்புப்பேருரையை கனடிய தொழில்வளப் பொருளியல் முதலீட்டு ஆலோசகர் ரோய் இரத்தினவேல் ஆற்றியிருந்தார். அவரது ஆங்கில உரையின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது:
பெரியோர்களே, தாய்மார்களே, கனடாவின் தமிழ் சமூகத்தின் அங்கத்தவர்களே. பெருமதிப்புக்குரிய உங்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
இந்த இனிய மாலைப்பொழுதினிலே, கனடியத் தமிழர் பேரவையின் தைப்பொங்கல் விழாவில், உங்களுடன் இணைந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாம் செய்துவரும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கான தேர்வுகளிலேயே நம் இளம் தலைமுறையினரின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பது மிக முக்கியமானதாகும். ஒரு பண்டிகையைக் கொண்டாட மட்டுமல்ல நாம் கொண்டிருக்கின்ற நாகரீகத்தின் தொடர்ச்சியை மீண்டும் உறுதிப்படுத்தவும் இன்றைய பொழுதில் நாம் கூடியிருக்கிறோம்.
தைப் பொங்கலானது,மனித வாழ்வுக்கு அடிநாதமாயிருக்கும் சூரியனை, விளை நிலத்தை, கால்நடைகளை கூடவே அறுவடையை போற்றுவதாய், நன்றியுணர்வைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டதாய் உலகளாவிய நிலையில் வழங்கிவரும் பண்டிகைகளில் ஒன்று. இது நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால், வளம் என்பது தற்செயலாக ஏற்படுவது அல்ல; அது கடின உழைப்பு தியாகம் மற்றும் பொறுமை ஆகியவற்றிலிருந்து விளைகிறது என்பதாகும்.
அதேசமயம், தைப்பொங்கல் ஒரு புதிய தொடக்கத்தையும் குறிக்கிறது. உங்களில் பலருக்கு நன்கு தெரிந்த ஒரு தமிழ் பழமொழி உள்ளது: “தை பிறந்தால் வழி பிறக்கும்.” அதன் பொருள், “தை மாதம் வரும்போது, புதிய பாதைகள் புலப்படும்” என்பதாகும்.
இந்தப் பழமொழி எப்போதையும் விட இப்போது நமது சமூகத்திற்கு தேவையான மெய்யறிவைக் கொண்டுவருவதாக உள்ளது.
இந்த மாலைப்பொழுதில், எவையெவையெல்லாம் அதற்கான வழிமுறைகளாக இருக்கும் என்பதைப்பற்றி நான் வெளிப்படையாக, ஆனால் மரியாதையுடன், பேச விரும்புகிறேன். அது, நமது சமூகம் தேர்ந்தெடுத்த வழிமுறைகள், நாம் புறக்கணித்த வழிமுறைகள் மற்றும் கனடாவில் வளரும் தலைமுறைகளுக்காக நாம் கட்டியெழுப்ப வேண்டிய வழிமுறைகள், தீர்வுகள் என்பனவற்றிற்கானதாயிருக்கும்.
தீர்வுகள் என்னிடமேயுண்டு என்பதுபோல நான் பாவனை செய்யப்போவதில்லை என்பதை முதலில் கூறிக்கொண்டு ஆரம்பிக்கிறேன். நான் என்னுடைய சொந்தக் கருத்துக்களால் கவரப்படுவதற்கு அப்பாற்பட்டவன் அல்ல. அதற்காக, எப்போதும் நான் சரியானவன் என்பதுமில்லை. சரியானவற்றிற்கு அருகாமையில் கூட நான் இல்லாதிருக்கலாம். அந்தப் பணிவுடன், பயனுள்ளதாகக் கருதக்கூடிய சில எண்ணங்களை எடுத்துரைக்க விரும்புகிறேன்.
சுமார் 165 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தனது உரையொன்றில் “அமைதியான கடந்த காலத்தின் கோட்பாடுகள் கொந்தளிக்கும் இன்றைய நிகழ்காலத்திற்குப் போதுமானவை அல்ல. இக்காலம் சவால்களால் நிரம்பியுள்ளது, ஆகையால் நாம் கால நிலைமைகளுக்கேற்ப உயர வேண்டும். எமது நிலைமை புதியது என்பதால் நாம் புத்தாக்கத்துடன் செயல்பட வேண்டும். புதியவகையில் சிந்திக்க வேண்டும்.” என்றார்.
பெரியோர்களே, நமது சமூகத்திற்கு இந்த அறிவுரை மிகவும் பொருத்தமானதாயிருக்கிறது.
ஒரு சமூகமாக, நமது கடந்த கால தோல்விகள் தரும் பாடங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவற்றைப் புராணக் கதைகள் போல பார்க்கத் தேவையில்லை. காலவதியாகிப்போய்விட்ட கருத்துக்களை சரிபிழை பார்த்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு நமது சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அது ஏனென்றால், தமிழ் இளம் தலைமுறையினர் விமர்சன சிந்தனைக்கு இடங்கொடுக்கும் நிலையிலிருப்பவர்கள்; கலாச்சார ஏக்க உணர்வுகளுக்கல்ல.
பல்வேறு சந்தர்ப்பங்களில், தமிழ்ப் பெருமை, வரலாறு என்ற கொடிகளின்கீழ் நின்று ஈழத்தமிழர்களில் குறிப்பிட்டதொரு பகுதியினர் காலம்கடந்துபோன மகிமைகளிலும், அழுகுரல்களிலும் சிக்கிக்கொண்டுவிட்டிருப்பதைக் காண்கிறேன்.
இது கவியரசர் கண்ணதாசனின் ஆழமான மற்றும் சிந்திக்க வைக்கும் வரிகளை எனக்கு நினைவூட்டுகிறது: "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை"
நல்ல நோக்கத்துடன் செயல்படும் தமிழ் கலாச்சார மற்றும் பாரம்பரிய அமைப்புகள் பலவும், நம் இளம் தலைமுறையை நாளைய சவால்களுக்குப் பதிலாக நேற்றைய போர்களை எதிர்கொள்வதற்காக பழக்கப்படுத்துவதுபோலத் தெரிகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தம்மையறியாமல் நன்மையை விட அதிக தீங்குகளையே செய்து கொண்டிருக்கிறார்கள்.
கனடாவில் — குறிப்பாக ரொறன்ரோ, ஸ்கார்பரோ, மார்க்கம், மிசிசாகா மேலும் மொன்ரியாலின் பகுதிகளில் — நாம் உலகளாவிய நிலையில் வெற்றிகரமான புலம்பெயர் தமிழ் சமூகங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளோம். நாங்கள் இங்கு வந்தபோது, ஆங்கிலம் எங்கள் முதல் மொழியாக இல்லைத்தான், ஆனால் எங்கள் நம்பிக்கைகளும், கனவுகளும் கனேடியர் என்ற அடையாளம் காணக்கூடிய வகையில் இருந்தன.
உலகின் பிற பகுதிகளிலிருந்து வந்த குடியேறிகள் போலவே நாமும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் நூற்பா சொல்வதற்கொப்ப பழதையெல்லாம் கடந்து, புதிய வாழ்க்கையை கட்டியெழுப்புவதில் உறுதியாக இருந்தோம்.
கனடாவில் எங்களுக்கு சுதந்திரம், தேர்வு ஆகியவை கொடைபோலக் கிடைத்ததன. முடமாகிக் கிடந்த எமது ஆன்மாவிற்கு அது ஒரு செயற்கை உறுப்பாக இருந்தது. இருளாக்கப்பட்டிருந்த உலகில் மனிதநேய மின்னல் போல அது இருந்தது.
இன்று நாம் ஏராளமான தொழில்முறை விற்பன்னர்கள், வணிகப்பெருந்தலைகள், சட்ட ஆலோசகர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், திரைப்படக் கலைஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கொள்கை ஆலோசகர்கள், தொழில் முனைவர்கள் என பல்வேறு திறனாளர்களைக் கொண்டிருக்கிறோம்.
நமது பிள்ளைகள் ஹார்வர்டு பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், மக்கில் பல்கலைக்கழகம், வாட்டர்லூ பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழகம் உட்பட தலைசிறந்த பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் படிக்கின்றனர்.
மிகக் குறுகிய காலத்தில் நமது சமூகம் சாத்தியமற்றது என்று பலரும் ஒருகாலத்தில் கருதியதையெல்லாம் சாதித்துக் காட்டியுள்ளது.
ஒரே ஒரு தலைமுறைக் காலத்தில், ஆம் பெரியோர்களே, பல மேற்கத்திய நாடுகளில் ஈழத் தமிழர்கள் ஒரே ஒரு தலைமுறைக் காலத்தில் துன்பத்திலிருந்து செழிப்புக்குச் சென்றுவிட்டார்கள். பாதிக்கப்பட்டோர் வெற்றியாளர்களாக மாறியுள்ளனர். இந்த மண்டபத்திலிருக்கும் நீங்கள் அனைவரும் அந்த வெற்றியின் சாட்சிகள். இந்த வெற்றியை நாம் கொண்டாட வேண்டும்.
ஆனால், இங்கே ஒரு தோற்றமுரண் [Paradox] இருக்கிறது. நாம் அடைந்த சாதனைகள் ஒருபுறமிருக்க, மிகக் கடினமாக கட்டியெழுப்ப வேண்டிய ஒன்றை நாம் இழக்கவும் தொடங்கியுள்ளோம்: அதுதான் அரசியலுக்கான மற்றும் சமூகத்திற்கான மூலதனம்.
முன்னொரு காலத்தில் கனேடிய தமிழ் குரல்கள், தேசிய நிலைப்பட்ட கவனத்தை பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும், மனித உரிமைகள் மன்றுகளிலும் பெற்றிடும் நிலை இருந்தது. நமது பிரச்சினைகள் முக்கியமானவையாக எடுத்துக் கொள்ளப்பட்டன. நமது அடையாளத்தின் வலிமை உணரப்பட்டிருந்தது. நமது இருப்புக்கு சக்தி இருந்தது.
இன்று, அந்தத் தாக்கம் மெதுவாக மங்கிக் கொண்டிருக்கிறது. இது கனடா நம்மை நிராகரித்து விட்டதால் நடக்கவில்லை. மாறாக, வானம் நோக்கி கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஒன்றிருக்க, நாம் கிடங்குகளுக்குள் கொட்டிக் கொண்டிருக்கிறோம். தாக்கத்தை உட்புறமாக திருப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் அனுமதித்திருப்பதெல்லாம் பிரிவுகளை, முத்திரை குத்தல்களை, தூய்மைச் சோதனைகள் செய்வதை, அமைப்புக்களுக்கிடையேயான முரண்பாடுகளைத்தான். தமிழ் என்ற அடையாளத்தை உடைத்தெறியும் வகையில் இது இருக்கிறது. மூலோபாய சிந்தனையை, ஏக்க உணர்வுகள் மாற்றீடு செய்வதற்குத்தான் அனுமதி தந்திருக்கிறோம்.
இறந்த காலத்தின்மேல் காதல்மயமாகி, நம் எதிர்காலத்தைப் புறக்கணித்து வருகிறோம்.
தெளிவாக சொல்கிறேன்: நமது வரலாறு — குறிப்பாக தமிழீழம் சார்ந்த அனுபவங்கள் - நினைவாஞ்சலிக்குரியவை. இனப்படுகொலை என்று சொல்லப்படுகின்ற வகையில் நடந்த போர், இடம்பெயர்வு, இழப்பு ஏற்படுத்திய துயர உளைச்சல்கள் அழியலாகாது. நமது போராட்ட நாயகர்களும், மரணித்தவர்களும் எந்த நிலையிலும் கௌரவமிழக்கப்பட வைக்கலாகாது. இன்னும் சொல்லப்போனால், நம் பெற்றோர்களின் மனவலி நமது பிள்ளைகளின் வசதி நிமித்தம் சிறுமைப்பட வைத்தலாகாது.
தமிழ் புலம்பெயர் சமூகம் இதை உறுதிப்படுத்துவதில் முக்கிய இடத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் பெரியோர்களே, உத்திகள் எதையும் கொண்டிராத நினைவாஞ்சலிகளை அரசியல் என்று சொல்ல முடியாது. அது ஒரு உணர்ச்சி மட்டுமே. இப்பேர்ப்பட்ட உணர்ச்சியானது எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்காது. அரசியல் மூலதனத்தை கொண்டிருக்காது. இங்கு, கனடாவில், அடுத்த தலைமுறைக்கான வாய்ப்புக்களையும் உருவாக்கித் தராமலே போய்விடும்,
தமிழ் இளம் தலைமுறையினர் செழிக்க வேண்டுமென்றால், நமது நிலைமைகளை நாம் எடுத்துரைக்கும் பாணி வளர்ச்சி பெற வேண்டும். அந்த எடுத்துரைத்தல்கள் பாரம்பரியப் பெருமைகளை சொல்லும் அதே கணத்தில், நடப்புக்கு ஏற்ற, துணிச்சலான, எதிர்காலம் நோக்கிய போக்கைக் கட்டமைக்கின்ற வகையில் இருக்க வேண்டும்.
அதற்குத் தேவையானதைக் கற்றுக் கொள்வதில் நமது சமூகம் இன்னும் திணறிக் கொண்டு இருக்கிறது. அதற்கு அறிவுத் திறன் அரசியல் முதிர்ச்சி இரண்டும் தேவை.
கருத்து வேறுபாடு இருந்தாலும், ஆக்கபூர்வமான கண்ணோட்டங்களை அனுமதிக்கும் விருப்பு இருத்தல் வேண்டும்.
குறியீட்டு அடையாளச் சின்னங்களுக்கும், உத்திகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை உணரும் தாழ்மையுள்ளம் வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த கால காயங்களுக்கு மேலாக எதிர்கால வெற்றிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் செயல்முறை ஒழுக்கமும் தேவை.
இன்றைய நிலையில், இவற்றிற்கான விருப்பு குறைவாகவே தெரிகிறது. இந்தப் போதாமையானது கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது - அது புவிசார் அரசியல் விளைவுகளையும் கொண்டுள்ளது. நாம் உள் முரண்பாடு தரும் பிரிவுகளில் சிக்கித்திணறிக்கொண்டிருக்க, மற்றைய புலம்பெயர் சமூகங்கள் தமக்கான பொருளாதார வலையமைப்புகள், அரசியல் கூட்டணிகள், தொண்டு நிறுவனங்கள், ஆய்வு மையங்கள் எனப் பலவற்றையும் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன.
இதை நேர்மையாக நோக்குவோமானால் ஒரு சமூகமாக நாம் வெளிப்புற சக்திகளிடம் தோற்கவில்லை, நம்மிடையான பிரிவுகளிடம் தோற்றுப்போயிருக்கிறோம்.
இது குற்றச்சாட்டு அல்ல. இது அகஆய்வுக்கான அழைப்பு. இது செயல்பாட்டிற்கான அழைப்பு.
கனடா போன்ற பன்முக ஜனநாயகத்தில், அதிகாரமானது இருப்பின் மூலம், பங்கேற்பின் மூலம், முன்மொழிவின் மூலம் உருவாகிறது. அது போராடுவதால் மட்டும் கிட்டிவிடாது.
ஆனால் கனடிய தமிழ் சமூகம் புலம்பிடும் உத்தியையே தேர்ந்தெடுக்கிறது. புதியதாயும், புத்தம் புதியதாயும் இருக்கவேண்டிய அணுகுமுறைகளை அது ஏனோ தேர்ந்தெடுப்பதாயில்லை.
இந்தப் புலம்பல் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பாது. வெளிநாட்டுறவுக் கொள்கைகளில் ஈடுபட அறிவார்ந்த தமிழ்மக்களை அனுப்பி வைக்காது. தமிழ் ராஜதந்திரிகள் G7 மாநாடுகளுக்கு செல்ல வைக்காது. முன்னணி தொழில்துறைகளுக்கு தமிழ் விஞ்ஞானிகளை அனுப்பாது.
நிச்சயமாக, சமூகத்தின் உச்ச நிலைகளுக்கு தமிழ் இளம் தலைமுறையை கொண்டு செல்லவே செல்லாது.
நமது பெற்றோர் தாங்கிக்கொண்ட துயரங்கள் எல்லாமே, ஏக்க உணர்வுகளை நமக்கான சீதனமாக அதாவது வாரிசுரிமையாக வழங்குவதற்காக அல்ல. அவர்கள் தாங்கிக் கொண்டதெல்லாம், நாம் வாய்ப்புக்களை அவர்களது வாரிசுரிமையாக பெறுவதற்காகவே.
ஆகவே, இந்த இடத்தில் நம்முன் உள்ள கேள்வி எளிமையானது: நாம் நமது இளம் தலைமுறையினருக்கு எதை நமது வாரிசுரிமையாக வழங்கப் போகிறோம்?
நம் இளம் தலைமுறையை நாம் தயார்படுத்தப் போவது, நாளைய சவால்களை எதிர்கொள்ளவா அல்லது நேற்றைய போர்களை எதிர்கொள்ளவா?
இதை வேறுமாதிரிச் சொன்னால், எமது அடையாளத்திற்கானதொரு அருங்காட்சியகம், இறந்த காலத்திற்கான அஞ்சலியைச் செய்வதாக இருக்கப்போகிறதா? அல்லது இளம் தலைமுறையின் எதிர்காலத்தையும் எமது பாரம்பரியத்தையும் இணைத்துப்பார்க்கும் உத்தியோடு இருக்கப்போகிறதா?
கனடா முழுவதும் உள்ள மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், மதிப்புமிக்க நிறுவனங்களின் சுவர்களில் தமிழ் பெயர்கள் பொறிக்கப்படும் ஒரு எதிர்காலத்தை நாம் கற்பனை செய்ய செய்ய முடிகிறதா?
நமக்கு இரண்டாவது வாழ்க்கை வாழ வாய்ப்பை அளித்த இந்த நாட்டிற்கு மனம் உவந்து திருப்பிக் கொடுத்த சமூகமாக நாம் நினைவு கூரப்படுவோமா?
இவையெல்லாம் என்னை 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று நாம் போற்றும் அந்த மெய்யறிவிடம் அழைத்துச் செல்கிறது.
புதிய பாதைகள் தானாக உருவாகுவதில்லை. நாம் தேர்ந்தெடுத்தால்தான் உருவாகும். நாம் கட்டியெழுப்பினால்தான் அவை உருவெடுக்கும்.
அவை உருவெடுப்பது நாம் நம்மையே, 'வெற்றியாளர்கள்-தோல்வியாளர்கள்', 'தூயவர்கள்-துரோகிகள்', 'உண்மையான தமிழர்கள்-பொய்யான தமிழர்கள்' என்றெல்லாம் பிரிப்பதை நிறுத்தும் காலம் உருவாகும்போதுதான்.
இந்த நடத்தையோடே நாம் வாழ்வைத் தொடருவோமாயிருந்தால், அது தவறு செய்வதென்பதை ஒரு பழக்கவழக்கமாக்கி விட்டு விடும்.
இவைகளைத் தெரிந்தும், அந்தப் பாதையில் நாம் தொடர்ந்தும் செல்வோமேயானால், நாம் அனைவரும் ஒன்றாகவே இழப்புக்களை சந்திப்போம் — இதில் சந்தேகம் எதுவுமில்லை.
கனடிய தமிழர்களுக்கு முன்னாலுள்ள தேர்வு கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலானதல்ல. அது நினைவகளால் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் வைத்துக் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கும் இடையிலானது. முதலில் இருப்பது நம்மை முன்னேற்றும். இரண்டாவது நம்மை தேங்கிவிடச் செய்துவிடும்.
என் பார்வையில், சமூகமாக நாம் முன்னேற மூன்று விஷயங்களை செய்ய வேண்டும்:
முதலாவதாக — எதிர்காலத்தை நோக்கிய சமூக அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும் அதாவது 'மறுசீரமைப்பு நிலைப்படுத்தல்' [Rebrand] வேண்டும்.
அமைப்புகள் நமது வரலாற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்காக மட்டுமில்லாமல், நமது விதியை வடிவமைக்கும் வகையில் அமைய வேண்டும்.
இத்தால், கனடியத் தமிழர் பேரவை [Canadian Tamil Congress — CTC] மற்றும் பிற தமிழ் அமைப்புகள் தமது செயல்பாட்டுக் கொள்கைகளை 'மறுசீரமைப்பு நிலைப்படுத்தல்' (Rebrand) செய்ய வேண்டுமென்றும், செயல்பாட்டுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போதைய உத்தியை மறுபரிசீலனை செய்யாதுவிடின், தமிழ் புலம்பெயர்ந்தோரின் செல்வாக்கு வெறும் உணர்சிக்குவியலாயும் கூடவே குழப்பகரமாகியும் சரிந்து விழுந்து போகக்கூடும்.
இரண்டாவதாக — நாம் ஒற்றுமையில் 'மறு முதலீடு' [Reinvest] செய்ய வேண்டும்.
வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமானவை. ஆனால் துண்டு துண்டாகப் பிரிவது ஆபத்தானது. உட்பிளவுகள் காரணமாக கனடாவில் நமது அரசியல் ஏற்புநிலை கொண்டிருக்கும் முக்கியத்துவம் சிதைந்து போக நாம் அனுமதிக்க முடியாது. அதற்கான விலை மிக அதிகம்.
அந்தவகையில், அனைத்து அமைப்புகளும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த மாபெரும் தேசத்தில் நமது கூட்டு எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்த ஒன்றிணையுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
மூன்றாவதாக — தமிழ் வெற்றி நிலை என்றால் கனடாவில் எப்பேர்ப்பட்டது என்பதை 'மறுவரையறை' [Redefine] செய்ய வேண்டும்.
தமிழ் இளம் தலைமுறையினர் தங்களை விஞ்ஞானிகள், தூதர்கள், புதுமையாளர்கள், CEO-க்கள், திரைப்படக் கலைஞர்கள், நிறுவனர், கொள்கை வடிவமைப்பாளர்கள் என்று கற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மாறாக பாதிக்கப்பட்டவர்களாக, செயல்பாட்டாளர்களாக அல்லது இழப்பின் வலி காக்கும் காவலர்களாக என்று மட்டும் அல்ல. நீண்ட காலமாக நான் நம்புவதொல்லாம், சூழ்நிலைகள்தான் உங்களை பலிக்கடா ஆக்குகின்றன; ஆனால் நீங்கள் செய்யும் தேர்வுகள் உங்களை ஒருமித்தவராய் இருக்கச் செய்கின்றன என்பதேயாகும்.
ஆகவே மேற்சொன்னவற்றை சுருக்கமாகச் சொல்லப்போனால் நாம் (முதலில்) அமைப்புகளை 'மறுசீரமைப்பு நிலைப்படுத்தல்' [Rebrand] செய்ய வேண்டும், (இரண்டாவதாக) ஒற்றுமையில் 'மறு முதலீடு' [Reinvest] செய்ய வேண்டும், (மூன்றாவதாக) வெற்றி என்பது என்னவென 'மறுவரையறை' [Redefine] செய்தல் வேண்டும்.
மனிதகுலத்தின் அனுபவங்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நாம் வாழ்க்கையை கடந்து செல்லும்போது, அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்கிறோம்.
நமது சொந்த நடத்தையை திரும்பிப் பார்க்கும்போதெல்லாம், இளம் வயதில் நாம் செய்த செயல்களைக் கண்டு ஒரு காலத்தில் எவ்வளவு மடமையாக இருந்தோம் என்று எண்ணுகிறோமன்றோ. அதேபோல, தமிழ் அமைப்புகளும் தமது செயல்பாடுகளை மீள்பார்வை செய்து கடந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் புதிய பாதையை உருவாக்க வேண்டும்.
நாம் இதைச் சரியாக எடுத்துக் கொண்டால், கனடா தமிழர்களுக்கு ஒரு வளமான நிலமாக மட்டும் இருக்காது — அது ஒரு தளமாக மாறும். அந்தத் தளம் செல்வாக்கு, நேர்மறையான பங்களிப்பு, கண்ணியம் என்பவற்றைக் கொண்டதாய் அமையும்.
நாம் தோல்வியுற நேர்ந்தால், நாம் அனுபவத்தால் ஏற்படும் வலி கொண்ட சமூகமாக ஒருவேளை நினைத்துப் பார்க்கப்படக்கூடும். ஆனால் நாம் ஆற்றல் கொண்டிருந்தமை மறக்கப்பட்டுவிடும். ஒரு சமூகமாக முன்னேற வேண்டுமானால் — அது கலாச்சார ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ எதுவாகவுமிருக்கட்டும் — மாயைகளையும் தவறான நம்பிக்கைகளையும் நாம் கடந்தே ஆக வேண்டும்.
நமது அனுபவ வலி மற்றும் கடினமாகக் கற்றுக்கொண்ட அனுபவங்கள் எதிர்காலத்தின் மூலோபாய யதார்த்தத்துடன் கைகோர்க்க வேண்டும்.
அவ்வாறு அவை சேரவில்லையெனின், பெருமை பலவீனமாக மாறும், நம்பிக்கை மன வேதனையாக மாறும், வரலாறு மீண்டும் மீண்டும் ஒரேபோலவே திரும்பிக் கொண்டேயிருக்கும்.
ஆக, இன்றைய இனிய மாலைப்பொழுது வெறுமனே அறுவடைக் கொண்டாட்டம் அல்ல. இது சாத்தியப்பாட்டின் கொண்டாட்டம் என்று சொல்லிக்கொண்டு பொங்கலின் மெய்ப்பொருள் தரும் உணர்வோடு நான் என் உரையை முடிக்கிறேன்:
எங்கள் பெருமைகளை வியூகங்களோடு பொருத்திப் பார்ப்போம். எதிர்காலத்திற்கான பார்வையுடன் நமது நினைவுலகம் பொருந்தட்டும். மேலும் நமது அனுபவங்கள் ஒற்றுமையுடன் பொருந்திப் போகட்டும்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதால் — நாமே அந்த புதிய பாதைகளை உருவாக்கும் தலைமுறையாக இருப்போம்.
இவையெல்லாம் நமக்காக அல்ல — நாம் மறைந்த பிறகும் நம் பெயரையும் பாரம்பரியத்தையும் சுமக்ககப்போகின்றவர்களுக்காக.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க தமிழ் மொழி! வளர்க தமிழ் இனம்!
நன்றி!